
மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளும் உடனடியாக ரத்துசெய்யுமாறு அறிவிப்பு
அனைத்து மீன்பிடி படகு நடவடிக்கைகளும் மறு அறிவிப்பு வரை ரத்து செய்யப்படும் என கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அபாயகரமான கடல் பகுதிகளில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்று அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் மற்றும் வானொலி செய்திகளுக்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி நேற்று நள்ளிரவு வரை இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டது .
அடுத்த 30 மணி நேரத்திற்குள் அது ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் நாட்டில் மழை மற்றும் காற்றுடனான நிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுவதாகவும், மேலும் இது தொடர்பாகவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல் , மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், அதே நேரத்தில் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் ஓரளவுக்கு காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

