இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள், பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு மதிப்பீடுகள் என்பன அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டன

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள், பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு மதிப்பீடுகள் என்பன அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டன

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள், பொதுத் தனிசு முகாமைத்துவச் சடத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான குறைமதிப்பீடுகள் என்ப அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டன.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (27) கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது.

1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2025.10.15ஆம் திகதிய 2458/43 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

சந்தையில் கீரி சம்பா அரிசிக்குக் காணப்படும் கட்டுப்பாட்டுக்கான தீர்வாக 2025.10.15ஆம் திகதி முதல் 2025.10.28ஆம் திகதி வரையில் அரிசி இறக்குமதிக்காக இதன் ஊடாக வழி ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீரி சம்பாவுக்குப் பதிலாக பொன்னி சம்பா அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இது 64,000 மெற்றிக் தொன் என்றும் அவர்கள் குழுவில் தெரிவித்தனர்.

அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் சந்தையில் கீரி சம்பாவின் விலை தொடர்ச்சியாக அதிகரித்த நிலையில் இருப்பது குறித்தும் குழு கேள்வியெழுப்பியது.

பொன்னி சம்பா இறக்குமதி செய்யப்பட்டாலும், கீரி சம்பாவிற்கு மாற்றாக அதைப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை என்றும் குழு சுட்டிக்காட்டியது.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை இருந்தாலும், பெரிய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் போலியான விலைப்பட்டியல் மூலம் கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், இந்த சூழ்நிலையைத் தடுக்க தலையிட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

வருடமொன்றுக்குத் தேவைப்படும் அரசியின் அளவு, உற்பத்தி செய்யப்படும் அரிசி மற்றும் உற்பத்திக்கான செலவுகள் குறித்தும் குழு, விவசாய அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இவை தொடர்பான துல்லியமான, புதுப்பிக்கப்படாத தரவுகள் இல்லாமை கடுமையான பிரச்சினையென்றும் குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், வாகன இறக்குமதி தொடர்பான 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2025.10.24ஆம் திகதிய 2459/46 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மோட்டார் வாகன இறக்குமதியின் போது பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளைக் குறிப்பிட்டு 2013.04.03ஆம் திகதி 1804/17 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2013ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி ஒழுங்குவிதிகளின் 05ஆம் இலக்க ஒழுங்குவிதிக்கு இணங்காது இறக்குமதி செய்ததன் காரணமாக மோட்டார் வாகனங்கள் இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தற்பொழுது நீதிமன்றத்தில் வழக்கொன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிலைமையின் கீழ் நிதி அமைச்சினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்ட உடன்பாட்டு நிபந்தனை மற்றும் அது தொடர்பாக உரிய தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த ஒழுங்குவிதி வெளியிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த இணக்கப்பாடு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எழுத்துப்பூர்வமாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, எதிர்காலத்தில் தொடர்புடைய ஒப்புதலைப் பரிசீலிப்பதாக குழு அதிகாரிகளுக்குத் தெரிவித்தது.

மேலும், 2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 2025.10.24ஆம் திகதிய 2459/52 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது.

பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் பிரிவு 35 மற்றும் 31 (7)இன் கீழ் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைய, எந்தவொரு சட்டரீதியான தடையுமின்றி முதநிலை வணிகர்கள் மற்றும் பிற நியமிக்கப்பட்ட சந்தை பங்கேற்பாளர்களுடன் ஈடுபடுவதற்கான அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த ஒழுங்குவிதிகள் அமைந்துள்ளன. நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து குழு இதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

இதேவேளை, 2025 ஆண்டுக்கான ரூ.31.5 மில்லியன் மற்றும் ரூ.18.5 மில்லியனுக்காகப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கும் குறைநிரப்பு மதிப்பீடுகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், கலந்துரையாடல்களின் பின்னர் இவற்றுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர் (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டியாராச்சி மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )