டித்வா புயல் ; இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் நிவாரண உதவி 3.5 மில்லியன் டொலராக உயர்வு

டித்வா புயல் ; இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் நிவாரண உதவி 3.5 மில்லியன் டொலராக உயர்வு

டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட சேதங்களை முன்னிட்டு, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு கூடுதலாக அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் நிவாரண உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்க டொலர் 1 மில்லியன் அவசர நிவாரண உதவியை அறிவித்திருந்த அவுஸ்திரேலியா, அந்த நிதியை இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்திடம் அதிகாரப்பூர்வமாக கையளித்திருந்தது.

புதிய அறிவிப்புடன், இலங்கைக்கு வழங்கப்படும் மொத்த அவசர நிவாரண உதவி தொகை அமெரிக்க டொலர் 3.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் தொடர்பில் இருந்து, அவசரத் தேவைகளுக்கான கோரிக்கைகள் அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவிகள் அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் மூலம் வழங்கப்படும்.

அவுஸ்திரேலிய உதவிகளில் அவசர நிவாரணப் பொருட்கள், தற்காலிக தங்குமிட வசதிகள், உணவு, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அடங்கும். கூடுதலாக, இடம்பெயர்ந்த மக்களின் சுகாதாரம் மற்றும் கல்விக்கான ஆதரவுகளும் வழங்கப்பட உள்ளன.

பெண்கள், சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )