
மோதல்களுக்கு மத்தியில் தாய்லாந்துடனான எல்லைக் கடவைகளை கம்போடியா மறு அறிவிப்பு வரை மூடியுள்ளது
கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே இடம்பெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கடவைகள் மூடப்பட்டுள்ளன.
மறு அறிவிப்பு வரை இந்த எல்லைக் கடவைகளை மூடப்பட்டுள்ளது என கம்போடிய உள்துறை அமைச்சு தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு தரப்பினரிடையே தொடர்ந்தும் மோதல்கள் அதிகரித்து வருவதால்,நேற்று மாத்திரம் நான்கு தாய்லாந்து படையினர் கொல்லப்பட்டதாக தாய்லாந்து இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த , திங்கள்கிழமை முதல் நேற்றுவரை 15 தாய்லாந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காயமடைந்த 270 பேரில் 6 பொதுமக்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கம்போடியாவில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த மோதல்களுக்கு மத்தியில் எல்லைக்கு அருகில் இருந்த சுமார் 700,000 மக்களை வெளியேற்ற இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன.
தாய்லாந்து நேற்று கம்போடியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து இராணுவம் இரண்டு F-16 போர் விமானங்களைப் பயன்படுத்தி பல இலக்குகளை தாக்கியதாக கம்போடிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹோட்டல் கட்டிடங்கள் மற்றும் ஒரு பாலத்தை தாய்லாந்து போர் விமானங்கள் தாக்கியதாகவும் கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியது
அத்துடன் தாய்லாந்து இராணுவ விமானங்கள் குண்டுவீச்சை நிறுத்தவில்லை என்றும்,மோதல்கள் தொடரும் என்றும் தாய்லாந்து இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
அதிகரித்து வரும் மோதல் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இரு நாடுகளின் தலைவர்களுடனும் பேசியதாகவும், அவர்கள் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் அவர் தனது சமூக ஊடக கணக்கில் கூறியிருந்தார்.
எனினும் அமெரிக்க ஜனாதிபதியின் கலந்துரையாடலுக்குப் பிறகு, இரு தரப்பினரும் போர்நிறுத்தம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து ஆக்கிரமிப்பாளர் அல்ல என்றும், போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்பு கம்போடியா தனது படைகளைத் திரும்பப் பெற்று எல்லையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதியிடம் கூறியதாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விரகுல் கூறினார்.

