நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு

‘திட்வா’ புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று (15) பொதுப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது.

மண்சரிவு காரணமாக வீதியில் குவிந்திருந்த மண் அகற்றப்பட்டு, வீதி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், வீதிக்கு மேலுள்ள மண்மேடு மேலும் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் வீதி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், இவ்வீதியில் கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

வீதித் திருத்தப் பணிகள் இராணுவத்தின் 6ஆம் பொறியியல் படைப்பிரிவு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நாவலப்பிட்டி மற்றும் எத்கல பொலிஸ் நிலையங்கள், பஸ்பாகே கோரல பிரதேச சபை உள்ளிட்ட பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

வீதியை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, பஸ்பாகே கோரல பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான வீதிகள் தற்போது திருத்தப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், உலப்பனை – கண்டி வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவு பெற்று, போக்குவரத்திற்காக திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )