கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை மு.க.ஸ்ராலின் சந்திப்பு

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை மு.க.ஸ்ராலின் சந்திப்பு

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலினை இன்று (18) சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடியதாகவும் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற
இச்சந்திப்பில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுகாஸ் கனகரத்தினம், கொள்கைப் பரப்புச் செயலாளர் நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியப் பேரவையினரால் இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், புதிய அரசாங்கம் உருவாக்கவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய சமஸ்டி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்குத் தமிழக அரசு இந்திய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும்
தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பாகவும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்ராலினிடம் தனித்தனியான கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சந்திப்பின் பின்னர் ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )