
கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி கொழும்பு மாநகர சபை வரவு செலவு திட்டத்திற்கு வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி செயற்பட்டமைக்காக கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா புஹாரி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த உறுப்பினருக்கு மு.கா. வின் செயலாளர் எம். நிசாம் காரியப்பர் கடித மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்ட முன்மொழிவுக்கு கட்சியின் தெளிவான தீர்மானத்துக்கு புறம்பாக அவர் ஆதரவாக வாக்களித்ததாகவும் இந்த வரவு, செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் குறித்த குழுக்கூட்டத்தில் பங்கேற்ற சொஹாரா புஹாரி ,கட்சியின் நிலைப்பாட்டை முழுமையாக அறிந்திருந்தபோதும் கட்சி தலைமைத்துவத்தின் தெளிவான அறிவுறுத்தல்களுக்கு முரணாக செயற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்நிலையில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலின் பேரில் அவரின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த விடயம் தொடர்பாக சொஹாரா புஹாரி, இந்தக் கடிதம் கிடைத்த நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் விளக்கத்தை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இணங்கத் தவறினால் மேலதிக ஒழுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த உறுப்பினரின் கட்சி இடைநிறுத்தம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.

