
அம்பலாந்தோட்டையில் கட்டளையை மீறி செலுத்தப்பட்ட வாகனம் மோதியதில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
புத்தாண்டு தினத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி மீது , கவனக்குறைவாக செலுத்தப்பட்ட வாகனம் மோதியதில், குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
அம்பலாந்தோட்டை வளவே கங்கை பாலத்திற்கு அருகிலுள்ள வீதித் தடையில் இன்று அதிகாலை 2.30அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அம்பலாந்தோட்டை நோக்கிச் சென்ற வாகனதை நிறுத்த உத்தரவிட்ட போதிலும் சாரதி நிறுத்தத் தவறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் (82615) எம். சரத் குமார, என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான சூரியவெவ, வீரியகம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்தார்.
எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட இவர் 3 ஆம் திகதி அம்பலாந்தோட்டையை விட்டு வெளியேறவிருந்தார்.
இன்று (01) அவருக்கு பிரியாவிடை விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பணியில் இருந்த கிராம சேவகர் ஒருவரும் காயமடைந்து அம்பலந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய கார் அம்பலந்தோட்டை நகருக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
காரில் பயணித்த ஓட்டுநர் மற்றும் இரண்டு பேரை அம்பலந்தோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
அம்பலந்தோட்டை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

