
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்
வெனிசுலா மீது நேற்று (03) திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமைக்கும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனக் கூறி சீனா, ரஷியா, பிரேசில், கியூபா உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக தற்போதைய துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றி, “வெனிசுலாவின் ஒரே சட்டபூர்வ அதிபர் நிகொலஸ் மதுரோ தான். அவரை அமெரிக்கா உடனடியாகவும், நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும்.
நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக அனைத்து பாதுகாப்புப் படைகளும் தயார்நிலையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.

