
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காததால் ஏற்படும் சிக்கலுக்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிராகரித்தவர்களே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்
கணக்காய்வாளராக பதவி வகித்த ஒருவர் இராணுவத்தில் இணைந்ததன் பின்னர் அவரின் பெயரை ஏன் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு முன்மொழியக் கூடாது என ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காததால் ஏற்படும் சிக்கலுக்கு, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிராகரித்தவர்களே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர முன்வைத்த ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் , ‘‘நாட்டுக்கு கணக்காய்வாளர் நாயகம் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியானவரின் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.
தகுதியான நால்வரின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்தும் அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை. இதனால் ஏற்படும் நிர்வாக சிக்கலுக்கு அனுமதி வழங்காதவர்கள்தான் பொறுப்புக்கூற வேண்டும்.
அரச நிர்வாகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு மாத்திரமல்ல பாராளுமன்றத்துக்கும் அரசியலமைப்பு பேரவைக்கும் பாரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்தை நெருக்கடிக்குள்ளாக்க எவரேனும் முயற்சிப்பது அவர்கள் நாட்டின் எதிர்கால பயணத்தை தடுப்பதை வெளிப்படுத்துகிறது.
அரசியலமைப்பின் 153 (1) பிரிவில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இலங்கை பட்டய கணக்காய்வாளர் நிறுவனத்தின் கணக்காய்வாளர் அல்லது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் கணக்காய்வாளரை இந்தப் பதவிக்கு நியமிக்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, அரசியலமைப்பின் பிரகாரம் கணக்காய்வாளர் பதவிக்கு தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களையும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் கணக்காய்வாளர்கள் இருவரின் பெயரையும் பரிந்துரைத்தார். அரசியலமைப்பு பேரவை இந்த 04 முன்மொழிவுகளையும் நிராகரித்துள்ளது.
கணக்காய்வாளராக பதவி வகித்த ஒருவர் இராணுவத்தில் இணைந்ததன் பின்னர் அவரின் பெயரை ஏன் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு முன்மொழியக் கூடாது? ஜனாதிபதியின் பரிந்துரை சட்டத்தால் குறிப்பிடப்பட்ட தகுதிக்கு அமைவாக உள்ளதா என்பதையே அரசியலமைப்பு பேரவை ஆராய வேண்டும்.
அதனை விடுத்து தகுதியானவர்கள் வெளியில் உள்ளார்களா அல்லது வெளிநாட்டில் உள்ளார்களா? என்பதை ஆராயக் கூடாது.” என தெரிவித்துள்ளார்.

