
ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும், இதுவரை படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தினால் (CBFC) தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தணிக்கை வாரியம் பரிந்துரைத்த அனைத்து திருத்தங்களும் படத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனை கண்காணிப்பு அதிகாரியும் உறுதி செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அவ்வாறு திருத்தங்கள் செய்யப்பட்டால் ‘U/A’ சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை வாரியம் தெரிவித்திருந்ததாகவும் அவர் வாதிட்டார்.
ஆனால், படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் உள்ளதாக யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த மத்திய தணிக்கை வாரியம், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என மனுதாரர் கோர முடியாது என வாதம் முன்வைத்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள புகாரின் முழு விவரங்களையும் நாளைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.


