
6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, அவற்றை 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 1ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.
சர்ச்சைக்குரிய 6ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு மேற்கொண்ட விசாரணை அறிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனுடன், எதிர்கால கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் பின்வரும் ஐந்து முக்கிய தூண்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்:
- மனிதவள மேம்பாடு
- உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்
- மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள்
- பாடத்திட்ட மேம்பாடு
- பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு
இந்தத் திட்டமிட்ட அணுகுமுறை மூலம் நாட்டின் கல்வி முறைமை நீடித்த மற்றும் தரமான முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தினார்.

