சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் இன்று

சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் இன்று

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 30-ந் திகதி நடை திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சுத்திகிரியை பூஜைகள் நடத்தப்பட்டன.

கோவிலில் நேற்று முன்தினம் பிரசாத சுத்தி பூஜைகளும், நேற்று பிம்ப சுத்தி பூஜையும் நடைபெற்றது.

இன்று வழக்கமான பூஜைகளுடன் பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 6.15 மணிக்கு திருவாபரணம் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு, தந்திரி மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் அதை பெற்றுக்கொண்டு ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

அப்போது பொன்னம்பலமேட்டில் சாமி ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் மூன்று முறை காட்சி அளிப்பார். இதனைத் தொடர்ந்து புஷ்பாபிஷேக வழிபாடுகள் நடைபெறும்.

மகர ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நான்கு திசைகளிலும் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கி வருகின்றனர். குறிப்பாக பெரியானை வட்டம், பாண்டித்தாவளம், பம்பை மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் பெருமளவு பக்தர்கள் முகாமிட்டு உள்ளனர்.

பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஏராளமான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணிக்காக பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் கூடுதலாக ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகர ஜோதியை காண சபரிமலையை சுற்றியுள்ள 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஜோதி தரிசனம் முடிந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,000 சிறப்பு பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகரவிளக்கை முன்னிட்டு அனைத்து முன் ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ள பக்தர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புல்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். மகரவிளக்கையொட்டி இதுவரை 12 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்” என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )