
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 652 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் இணைந்து முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 30,214 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 264 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 161 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

