
அமெரிக்காவில் குடியேற்ற அதிகாரிகளின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் குடியேற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் போது, பெடரல் ஏஜெண்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மினசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்ஸ், வெள்ளை மாளிகையுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு பயங்கரமான துப்பாக்கிச் சூடு இதுவென சாடியுள்ள அவர், வன்முறையில் ஈடுபடும் பயிற்சியற்ற ஆயிரக்கணக்கான அதிகாரிகளை மினசோட்டாவிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கடுமையாக எச்சரித்துள்ளார்.
மினியாபோலிஸில் நேற்று (24) பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 37 வயதுடைய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) என அவரது பெற்றோர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) செவிலியராக பணியாற்றி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினியாபோலிஸில் கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெடரல் ஏஜெண்டுகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி 07 ஆம் திகதி, இமிகிரேஷன் அண்ட் கஸ்டம்ஸ் என்போர்ஸ்மென்ட் (ICE) அதிகாரி ஒருவரால் ரெனீ குட் (Renee Good) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம், மற்றொரு சம்பவத்தில் வெனிசூலா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை “மக்களுக்கு எதிரான திட்டமிட்ட மிருகத்தனம்” என வர்ணித்துள்ள ஆளுநர் டிம் வால்ஸ், இது சாதாரண குடியேற்ற அமுலாக்க நடவடிக்கையைத் தாண்டியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், துப்பாக்கியை வைத்திருந்த ஒரு நபர் ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது வன்முறையாக எதிர்ப்புத் தெரிவித்ததால் தற்காப்புக்காக சுட வேண்டியிருந்ததாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உள்ளூர் ஆளுநர் மற்றும் மேயரின் கருத்துகள் “கிளர்ச்சியைத் தூண்டும் வகையில்” இருப்பதாகவும், அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை மினசோட்டா மாநில அரசு முன்னெடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

