
நிப்பா வைரஸ் குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் ; சுகாதார பிரதி அமைச்சர்
இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் தொடர்பாக இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
குறித்த வைரஸ் தொடர்பாக இலங்கை சுகாதாரப் பிரிவுகள் தீவிர அவதானத்துடன் செயல்பட்டு வருவதாகவும், தற்போதைய நிலவரப்படி நாட்டிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிப்பா வைரஸ் ஆசிய பிராந்தியத்தினூடாக பரவக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தாய்லாந்து, சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் விமான நிலையங்களில் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸாக நிப்பா அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதன் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் வரை இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் தன்மை இருந்தாலும், அதன் பரவல் மிகக் குறைந்த அளவிலேயே இடம்பெறுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இலங்கையிலும் இந்த வைரஸ் குறித்து மிக நெருக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், இதுவரை நாட்டில் எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என கூறினார்.
“இலங்கைக்கு தற்போது இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. வரலாற்றில் இந்த வைரஸ் ஒருபோதும் பெருந்தொற்றாக மாறியதில்லை. சந்தேகிக்கப்படும் நபர்களைப் பரிசோதிக்கத் தேவையான ஆய்வக வசதிகளும் உபகரணங்களும் இலங்கையிடம் உள்ளது. நோய்வாய்ப்பட்ட ஒருவர் விமானத்தில் பயணம் செய்யும் அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க மாட்டார். எனவே நோயாளிகள் நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு,” என அவர் விளக்கினார்.
மேலும், பெருந்தொற்று நிலைமை இல்லாத நிலையில் விமான நிலையங்களில் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையில்லை என்றும், இதற்காக தேவையற்ற செலவோ நேர வீணாக்கமோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுகாதார பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

