
இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தில் தொடரும் இழுபறி 5-வது முறையாக பெயரை பரிந்துரைத்த ஜனாதிபதி
கணக்காய்வாளர் நாயகம் பதவி நியமனம் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவை அரசியலமைப்பு சபை ஆய்வு செய்து பெப்ரவரி 3 ஆம்திகதி இறுதி முடிவை எடுக்கும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளர் பெயரை ,ஜனாதிபதி ஐந்தாவது முறையாக அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்துள்ளார்.
இந்த விடயத்தில் இறுதி முடிவை எடுக்க அரசியலமைப்பு சபை இன்று கூடவிருந்த போதிலும், அதன் முடிவை எடுக்க அடுத்த செவ்வாய்க்கிழமை கூடும் என்று அமைச்சர் கூறினார்.
“கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ,ஜனாதிபதி ஒரு புதிய பெயரை சமர்ப்பித்துள்ளார். அதை ஆய்வு செய்ய உறுப்பினர்களுக்கு சிறிது காலம் தேவை.
எனவே, பாராளுமன்றம் கூடும் பெப்ரவரி 3 ஆம் திகதி ஒரு முடிவு எடுக்கப்படும் ,” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று கண்டியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த நியமனம் குறித்து தீர்மானிப்பதற்காக சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு சபை நேற்று (30) நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது.
இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாக ,சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐந்தாவது முறையாக அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்திருந்தார்..
கணக்காய்வாளர் நாயகத்தை (Auditor General) நியமிப்பதில் இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில் ,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட மூன்று புதிய சிவில் உறுப்பினர்களும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட போதிலும், நேற்றைய தினமும் கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பாக இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனையடுத்து, குறித்த பெயரை பரிசீலிப்பதற்காக அரசியலமைப்பு சபை இன்று மீண்டும் கூடுவதாக அறிவித்திருந்தது.
இலங்கையின் 41-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றிய சூலந்த விக்கிரமரத்ன அவர்கள் 2025 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து இந்தப் பதவி வெற்றிடமானது.
தற்போது 10 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படவில்லை..
ஜனாதிபதியால் இதற்கு முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் நான்கு பெயர்கள் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், அரசியலமைப்பு சபையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் அந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் பெயர்கள் நிராகரிக்கப்பட்டன.
தற்போது ஜனாதிபதி பரிந்துரைத்த எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயர் ஏற்கனவே ஒருமுறை ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு, அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
அரச நிதி கட்டுப்பாடு மற்றும் கணக்காய்வு நடைமுறைகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான இந்த முக்கி பதவிக்குவிரைவில் இணக்கப்பாடு எட்டப்படுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

