
பெலிகமுவ விவசாய பண்ணை காவலர் கொலை ; இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சந்தேகநபர் கைது
கலேவெல, பெலிகமுவ விவசாய பண்ணையில் காவலராக பணியாற்றிய ஒருவரை கொலை செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைந்து இருந்த சந்தேகநபரை, கலேவெல பொலிஸார் கிரிஉல்ல பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு தம்புள்ள – கலேவெல, பெலிகமுவ விவசாய பண்ணையில் அமைந்துள்ள வணிகக் கடையின் காவலர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கலேவெல காவல் நிலையம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்த கொலை சம்பவம் இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாக, விவசாய பண்ணையிலிருந்து பெறப்பட்ட பாதுகாப்பு கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், தப்பிச் சென்ற மற்றொரு சந்தேகநபரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அந்த நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த மேலதிக தகவல்களின் அடிப்படையில், கிரிஉல்ல பகுதியில் உள்ள ஒரு பொல்லெலி கார் பழுது பார்ப்புக் கூடத்தில் பணியாற்றி வந்த குறித்த சந்தேகநபரை, கலேவெல பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

