
தமது தற்கொலைப்படையைச் சேர்ந்த இரு பெண்களின் புகைப்படங்களை வெளியிட்ட பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு பெண் தற்கொலைப்படைத் தீவிரவாதிகளின் புகைப்படங்களை, தடைசெய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) வெளியிட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆசிபா மெங்கல் என்ற 24வயதுடைய ஒரு பெண்ணின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் நுஷ்கியில் உள்ள ஐ.எஸ்.ஐ (ISI) அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு உரிமை கோரியுள்ளது.
மற்றைய பெண்ணின் பெயர் விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை வரை நீடித்த இந்தத் தாக்குதல்களில், குறைந்தது 17 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
பலுசிஸ்தான் பிரிவினைவாதப் போராட்டத்தில் பெண்கள் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபடுவது ஒரு அசாதாரணமான மற்றும் கவலையளிக்கும் மாற்றமாக பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.
தாக்குதலுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட வீடியோவில், இரண்டாவது பெண் பாகிஸ்தான் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பதோடு, கிளர்ச்சிக்கு ஆதரவு கோருவதையும் காண முடிகிறது.
பல தசாப்தங்களாக நீடிக்கும் இந்தப் பிரிவினைவாத இயக்கத்தில், படித்த இளம் பெண்கள் தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆபத்தான போக்கை ஏற்பட்டுள்ளதாதாக சரவதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன .
1947-ல் இந்தியா – பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது, பலுசிஸ்தான் ஒரு தனி பகுதியாக இருந்தது.
பலுசிஸ்தான் ஆட்சியாளர் தனி ஆட்சி செய்ய விரும்பிய போதிலும், 1948-ல் பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்தி அந்த மாகாணத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டதாக பலுசிஸ்தான் மக்கள் கருதுவதே இன்றைய பிரிவினைவாதப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் 43% கொண்டுள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தான் இயற்கை எரிவாயு, தங்கம், தாமிரம் மற்றும் நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை கொண்டுள்ளது.
இந்த வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை பாகிஸ்தான் அரசு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பயன்படுத்துவதாகவும், பலுசிஸ்தான் மக்கள் இன்னும் அடிப்படை வசதிகள் (மின்சாரம், தண்ணீர்) இன்றி வறுமையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது
இதேவேளை பலுசிஸ்தானில் நிலவும் போராட்டங்களை பாகிஸ்தான் அரசு ஒரு பயங்கரவாதப் பிரச்சினையாகவே பார்க்கிறது எனவும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) போன்ற அமைப்புகள் வெளிநாடுகளின் சில வெளிநாடுகளின் தூண்டுதலோடு செயல்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவே தாம் ராணுவ நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் கூறுகின்றது.

