
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 838 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுடன் இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று (02) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
255 கிராம் ஹெரோயின்,
01 கிலோகிராம் 433 கிராம் ஐஸ் போதைப்பொருள்,
05 கிலோகிராம் 238 கிராம் கஞ்சா,
1,579 கஞ்சா செடிகள்,
120 கிராம் குஷ்ரக போதைப்பொருள்,
67 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள்,
744,869 போதை மாத்திரைகள்,
762 கிராம் 699 மில்லிகிராம் மதனமோதகம்,
792 கிராம் மாவா போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகளின் போது, குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 838 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நாளில் 842 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளான நால்வரை மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை உறுதி செய்ய, இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

