இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கங்காராம விஹாரையில் வைக்கப்பட்ட புத்தரின் புனித தாதுக்களை வழிபடும் புண்ணிய மகோற்சவத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டார்

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கங்காராம விஹாரையில் வைக்கப்பட்ட புத்தரின் புனித தாதுக்களை வழிபடும் புண்ணிய மகோற்சவத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டார்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவனிமோரி (Devnimori) தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த பெருமானின் புனித தாதுக்களை வழிபடும் புண்ணிய மகோற்சவத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பிற்பகல் கலந்துகொண்டார்.

இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன், விசேட விமானம் மூலம் இன்று (04) பிற்பகல் 1.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்தப் புனித தாதுக்கள், பின்னர் ஊர்வலமாக கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத் பிராந்தியத்தின் தேவனிமோரி பகுதியில் 1960-களில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் புனித தாதுக்கள், இதற்கு முன்னர் ஒருபோதும் இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த அரிய வழிபாட்டு வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் இன்று பிற்பகல் ஆரம்பமான இந்தப் புனித தாதுக்களை தரிசிப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு நாளை முதல் வழங்கப்படவுள்ளது.

நாளை (05) காலை 6.00 மணி முதல் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 7.00 மணி வரை ஏழு நாட்களுக்கு கொழும்பு கங்காராம விகாரையில் புனித தாதுக்களை தரிசிப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஏழு நாட்கள் நடைபெறவுள்ள இந்த தாது வழிபாட்டு நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )