
இலங்கையில் முதன்முறையாக K-Pop இசை நிகழ்ச்சிபிரபல தென்கொரிய இசைக்குழு வருகை
இலங்கையில் முதன்முறையாக கொரியன் பாப் (K-Pop) இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, தென்கொரியாவின் மிகவும் பிரபலமான “Seet-ch” இசைக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பத்து பேரைக் கொண்ட இந்த இசைக்குழுவினர், எதிர்வரும் 07 ஆம் திகதி கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (SLECC) நடைபெறவுள்ள “கொரிய கலாசாரக் கண்காட்சி மற்றும் விழாவில்” தமது இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று மாலை 04.50 அளவில் தென்கொரியாவின் இன்சியோன் (Incheon) நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-471 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த இசைக்குழுவினரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
K-Pop (Korean Pop) என்பது தென்கொரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பிரபலமான இசை வகையாகும். இது வெறும் இசை மட்டுமல்ல, நவீன கலாசாரம், நடனம் மற்றும் நாகரிகம் (Fashion) ஆகியவற்றின் கலவையாகும்.
இலங்கையிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கொரிய கலாசாரம் மற்றும் இசைக்கு பெரும் வரவேற்பு உள்ளது. எனவேதான், தென்கொரியாவின் “Seet-ch” போன்ற ஒரு குழு நேரடியாக இலங்கைக்கு வந்து இசை நிகழ்ச்சியை நடத்துவது ஒரு வரலாற்றுச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

