
இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சாரதி மீது தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதல்அரச பஸ் 5 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டதால் சம்பவம்
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற அரச பஸ்ஸின் சாரதி மீது, அதே பாதையில் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அரச பஸ் வழமையாகச் செல்ல வேண்டிய நேரத்தை விட 5 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றதாகக் கூறியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹட்டன் டிப்போவின் போக்குவரத்து மேலாளர் தெரிவித்தார்
இன்று காலை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
லிந்துலை, மெராயா நகருக்கு அருகில் வைத்து அரச பஸ்ஸை வழிமறித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
.
பின்னால் துரத்தி வந்த தனியார் பஸ்ஸின் சாரதி, அரச பஸ்ஸை முந்திச் சென்று குறுக்காக நிறுத்தி வழிமறித்துள்ளார்.
பின்னர் அரச பஸ்ஸின் சாரதி ஆசனத்தின் கதவைத் திறந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடந்த சமயம் பஸ்ஸிற்குள் பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகளும் இருந்துள்ளனர். இந்தப் பதற்றமான சூழலை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை: இந்தச் சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படவுள்ளதாக ஹட்டன் டிப்போவின் போக்குவரத்து மேலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

