செம்மணி மனித புதைகுழியில் தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றம்

செம்மணி மனித புதைகுழியில் தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றம்

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்றைய தினம் (09) நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மொத்தம் 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பல தடவைகள் பெய்த கடும் மழையால் புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அகழ்வு பணிகளைத் தொடர முடியாத சூழல் உருவானது.

இந்நிலையில், புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், மழை நீர் வெளியேற்றப்பட்ட பின்னரும் புதைகுழி சேற்று தன்மையுடன் காணப்படுவதால், அடுத்த கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அன்றைய தினத்திற்கு வழக்கு திகதி வழங்கப்பட்டுள்ளது.

மழை நீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகள் நிரஞ்சன், ஞா. ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனிடையே, மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் திரும்பியுள்ளமையால், இவ்வாண்டிற்காக புதிய பாதீடு சமர்ப்பித்து நிதியை மீளப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக புதிய பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )