
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம் ; எனது பெயர் தொடர்பான தகவல்கள் பொய்யானவை
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை அமெரிக்க நீதித்துறை, கடந்த ஜனவரி 31ஆம் திகதி வெளியிட்டது.
இந்த ஆவணங்களில் உலகின் பல செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் திபெத்திய மதகுரு தலாய் லாமா உள்ளிட்டோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில் தனது பெயரை தொடர்புபடுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என திபெத்திய மதகுரு தலாய் லாமா மறுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஆவணங்களில் 169 முறை தலாய் லாமாவின் பெயர் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனை தலாய் லாமா ஒருநாளும் சந்தித்ததில்லை என அவரது அலுவலகம் உத்தியோகபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
இந்த தகவல்கள் அடிப்படையற்றவை என்றும், தலாய் லாமாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படுவதாகவும் அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

