
மத்திய கிழக்கை சூழும் பதற்றம் : டிரம்பை சந்திக்கும் நெதன்யாகு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கடும் பதற்ற நிலைக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, ஈரானின் அணு ஆயுத திட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தும் ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் என்றும் நெதன்யாகு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா. போன்ற அமைப்புகளுக்கு ஈரான் வழங்கும் ஆதரவை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நெதன்யாகு கோர உள்ளார்.
அமெரிக்கா புறப்படும் முன் ஊடகவியலாளர்களிடம் பேசிய நெதன்யாகு, “இந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படை கொள்கைகள் குறித்து எமது நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதியிடம் விளக்குவேன்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை நீக்காவிட்டால், யுரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்த முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது.
டிரம்ப் மீண்டும் பதவியேற்றதிலிருந்து இது நெதன்யாகுவின் ஆறாவது அமெரிக்க பயணம் ஆகும். உலகத் தலைவர்களில் அதிகமாக டிரம்பை சந்தித்தவர் நெதன்யாகு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் இஸ்ரேலுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என நீண்ட காலமாக கூறிவரும் நெதன்யாகு, ஈரானின் செல்வாக்கை மத்திய கிழக்கில் கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

