
ஐசிசி T 20 உலகக் கிண்ணம் : முதல் முறையாக இன்று இத்தாலியை எதிர்கொள்ளும் நேபாளம் !
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில்
நேபாள் அணி இத்தாலி அணியை எதிர்கொள்ளவுள்ளது.
குறித்த போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது
இதற்கு முன்னர் இவ் இரு அணிகளும் ஒருபோதும் நேரடியாக மோதியதில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், கடைசி நேரத்தில் நான்கு ஓட்டங்களினால் வெற்றியை இழந்த நேபாள் அணி அந்த தோல்வியிலிருந்து தன்னம்பிக்கையுடன் இன்று மீண்டும் களமிறங்குகிறது.
மும்பையில் நடைபெறும் இந்த போட்டியிலும், அதே அதிரடியான ஆட்டத்தைக் கொண்டு வர நேபாள் முயற்சிக்கும்
நேபாள் அணியில், சந்தீப் லாமிச்சானேவுக்கு (Sandeep Lamichhane) அடுத்ததாக திபேந்திர சிங் ஏரி (Dipendra Singh Airi) மற்றும்
லோகேஷ் பாம் (Lokesh Pham)ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக விளங்கி வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இவர்கள் இருவரும் ரசிகர்களின் பெரும் உற்சாகத்துடன் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றிருந்தனர்.
இதனால் நேபால் அணியின் துடுப்பாட்ட வரிசை பலமாக இருக்கிறது
இருப்பினும், பந்து வீச்சில் நேபாள் அணி கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் கடைசி இரண்டு ஓவர்களில் மாத்திரம் 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததே நேபால் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், இத்தாலிக்கு எதிரான இன்றைய போட்டியில் நேபால் அணி வெற்றிபெற்றால் இரண்டு புள்ளிகளைப் பெறுவதுடன்
நேபாள் அணிக்கு குழு நிலை போட்டியில் நல்ல வாய்ப்பு உருவாகும்.
அதனைத் தொடர்ந்து, நேபாள் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தொடரில், நேபாள் அணி மேற்கிந்திய தீவுகளை 2–1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இத்தாலி அணி T20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் பெரிய அனுபவமாக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
மேலும், அந்த போட்டியின் முதல் நான்கு ஓவர்களுக்குள், அணியின் தலைவர் வெய்ன் மேட்சன் (Wayne Madsen) காயம் காரணமாக வெளியேறியிருந்தார். அவர் நேபாளுக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்க மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

