
இன்று சர்வதேச தாய்மொழி தினம்
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21-ஆம் திகதி மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) பொது மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2000 ஆம் ஆண்டு முதல் உலகளவில் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தை பிரகடனப்படுத்துவதற்கான யோசனையை முதன்முதலில் பங்களாதேஷ் முன்வைத்தது.
1952-ல் உருது மொழியைத் தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு எதிராக பங்களாதேஷில் (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது பலர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் நினைவுகூறப்படுகிறது .
நிலையான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மை அவசியம் என்று யுனெஸ்கோ சுட்டிக்காட்டுகிறது. ஒரு சமூகத்தின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பிரதான ஊடகமாக தாய்மொழி திகழ்கிறது.

