
பிரித்தானியாவில் மனைவியை குத்தி கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 37 வயதுடைய இலங்கையர் ஒருவருக்கு, ஐக்கிய இராச்சிய நீதிமன்றம் நேற்று (20) ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
நிரோதா நிவுன்ஹெல்ல என்ற 32 வயதுடைய தனது மனைவியை 37 வயதுடைய திசர வேரகலகே என்ற நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்தார்.
உயிரிழந்த பெண் வேறொருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி, கார்டிஃப் (Cardiff) நகரில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் இக்கொலை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் தனது மனைவியை 15 சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான கத்தியால் முகம், கழுத்து, நெஞ்சு, கை மற்றும் கால்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
வேகமாக தாக்கியதில் கத்தியின் கைப்பிடியும் உடைந்து போயுள்ளது.
இரண்டு வாகனங்களுக்கு இடையில் விழுந்த நிரோதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தத் தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்டு, மேலதிக படிப்பு மற்றும் வேலைக்காக பிரித்தானியா சென்றுள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 2025 ஏப்ரல் முதல் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் குற்றச்சாட்டை மறுத்த திசர வேரகலகே, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதற்கமையவே நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

