
நாமலின் இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் ஆற்றவிருந்த உரைக்கு புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புநிகழ்வு இரத்து
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge Union) மாணவர் சங்கங்களில் ஆற்றவிருந்த உரைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் வசிக்கும் எல்.டி.டி.ஈ ஆதரவு புலம்பெயர் அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்ச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த உரைகள் பெப்ரவரி கடைசி வாரத்தில் நடைபெறவிருந்தன.
ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு (TYO UK) ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையின் மூலம், நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரியிருந்தன.
பிரித்தானியா முழுவதிலும் உள்ள தமிழ் ஆதரவு அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்த உரைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையிலேயே, பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களைக் கருத்திற்கொண்டு இந்த நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

