
புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி சடலமாக மீட்புகொலையாளிகள் முச்சக்கரவண்டியுடன் தப்பியோட்டம்
புத்தளம், தில்லையடி அல்-காசிம் கிராமத்திற்கு அருகிலுள்ள வீதியொன்றில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய அப்துல் லத்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (21) இரவு அவர் வீட்டில் இருந்தபோது, யாரோ ஒருவர் அவரை வாடகைக்கு (Hire) அழைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் இன்று காலை வரை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அவரது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள ஆடப்பன வில்லுவ கிராமத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றிற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவ்வீதியால் சென்ற ஒருவர் சடலத்தைப் பார்த்து பொதுமக்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் முச்சக்கரவண்டி தற்போது காணாமல் போயுள்ளது. கொலையாளிகள் அவரைப் படுகொலை செய்துவிட்டு முச்சக்கரவண்டியைக் கடத்திச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

