
நாட்டின் சிங்கள ஊடகம் ஒன்று தனது சொத்துமதிப்பை மிகைப்படுத்தி கூறியதற்காக 10 பில்லியன் நஷ்ட ஈடு கோரும் அமைச்சர் லால் காந்த்
நாட்டின் சிங்கள ஊடகம் ஒன்று தனது 2025ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பியதாகக் கூறி அமைச்சர் கே.டி. லால் காந் அந்த நிறுவனத்திற்கு எதிராக சட்டத்தரணி ஊடாக அறிவித்தல் விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி அந்த சிங்கள ஊடக வலையமைப்பு வெளியிட்ட செய்தியில், அமைச்சரின் சொத்து மதிப்பு 460 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் தான் சமர்ப்பித்த தரவுகள் வேண்டுமென்றே மிகைப்படுத்தப்பட்டு, தவறாகக் கையாளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் மகளின் பெயரில் உள்ள சுமார் 143,000 ரூபா பெறுமதியான பங்குகள், நூற்றுக்கணக்கான மில்லியன் ரூபா பெறுமதியான முதலீடுகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
90,000 ரூபாவிற்கு வாங்கப்பட்ட அந்தப் பங்குகளின் தற்போதைய மதிப்பு 143,000 ரூபா மாத்திரமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல நிறுவனங்களில் 380 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பங்குகள் இருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அவர் கூறியுள்ளார்.
தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தமைக்காக 10 பில்லியன் ரூபா நட்டஈட்டை 7 நாட்களுக்குள் வழங்குமாறு அந்த நிறுவனத்திடம் அவர் கோரியுள்ளார்.
இதனை வழங்கத் தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
பொது அலைவரிசையை கட்சி சார்பான மற்றும் அவதூறு பரப்பும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாகக் கூறி, அந்த சிங்கள வலையமைப்பின் ஒலிபரப்பு உரிமத்தை ரத்து செய்யுமாறு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்போவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் அமைச்சர்களின் சொத்து விபரங்கள் தொடர்பான இத்தகைய வெளிப்படைத்தன்மை மற்றும் அது சார்ந்த ஊடக அறிக்கைகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

