நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இலங்கை?

நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இலங்கை?

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று தற்போது அரையிறுதியை நோக்கி பரபரப்பாக நகர்கிறது.

அந்தவகையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று முக்கியமான மோதலில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குழு 2 இல் இங்கிலாந்து, பாகிஸ்தானை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கான ஒரு இடத்தை உறுதி செய்துள்ளது. இதனால் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மூன்று அணிகள் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை – நியூசிலாந்து சூப்பர் 8 மோதல் கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கை அணிக்கு இப்போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியமாக மாறியுள்ளது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால், இலங்கை அணியின் அரையிறுதி கனவு முற்றிலும் சிதறிவிடும்.

2014 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு அதன் பின்னர் ஒரு முறை கூட அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை.

தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டிகளில் இலங்கை அணி மூன்று வெற்றிகளைப் பெற்று வலுவான அணியாகத் திகழ்ந்தது.

ஆனால் ஜிம்பாப்வே அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 147 ஓட்டங்களை துரத்திச் சென்ற இலங்கை அணி 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.

51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட அந்தத் தோல்வி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இதனால், இன்றைய போட்டியில் முழு ஆற்றலுடனும் திட்டமிட்ட அணுகுமுறையுடனும் களமிறங்க இலங்கை அணி திட்டமிட்டிற்கும்.

மற்றொரு புறம், நியூசிலாந்து அணி ஆரம்ப போட்டிகளை
ஆமதாபாத் மற்றும் சென்னை மைதானங்களில் விளையாடினர். அந்த மைதானங்கள் துடுப்பாட்டத்திற்கு ஏற்றவையாக இருந்தன.

ஆனால் சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகளும் இலங்கையில் நடைபெறுவதால், கொழும்பு மற்றும் பல்லேகலே மைதானங்களில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இது நியூசிலாந்து அணிக்கு புதிய சவாலாக அமைந்துள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்தின் முதல் சூப்பர் 8 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

அந்தப் போட்டி நடைபெற்றிருந்தால் நியூசிலாந்து அணிக்கு இலங்கையின் மைதான நிலையை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

மேலும் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து
அணிகளுக்கு இடையிலான போட்டி பாகிஸ்தான் அணிக்கும் முக்கியமானதாகும்.

இலங்கை அல்லது நியூசிலாந்து அணியின் வெற்றி – தோல்வியில் தான் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு சார்ந்துள்ளன.

இதனால், ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிற அணிகளும் இந்தப் போட்டியை ஆவலுடன் கவனித்து வருகின்றன.

அரையிறுதி நம்பிக்கையை உயிர்ப்பிக்க இலங்கை போராடுமா?
அல்லது நியூசிலாந்து முன்னிலை பிடித்து அடுத்த சுற்றை நோக்கி நகருமா?

கொழும்பில் நடைபெறும் இந்த மோதல் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )