
வான்பரப்பு மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) எடுத்துள்ள அவசரகால நடவடிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) எடுத்துள்ள அவசரகால நடவடிக்கைகள் குறித்து
அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறும் விமானப் பயணிகளின் வசதிக்காக ஒரு விசேட செயல்பாட்டுத் திட்டம் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புவெல்ல தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.
வான்பரப்பு மூடப்பட்டுள்ள நாடுகளுக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் பிட்ஸ் ஏர் (FitsAir) ஆகிய நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
ஏதேனும் அவசரத் தேவைகள் அல்லது விமானங்கள் திசைதிருப்பப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவற்றைக் கையாள்வதற்கு மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் (MRIA) முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் வழிகாட்டலின் கீழ், அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து இந்த அவசரகாலத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அல்லது அந்த நாடுகளின் வான்பரப்பைப் பயன்படுத்திப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னதாகத் தங்களது விமான நிறுவனங்கள் அல்லது பயண முகவர்களைத்தொடர்பு கொண்டு விமானத்தின் தற்போதைய நிலை குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

