ஈரான் எங்களிடம் இராணுவ உதவி கோரவில்லை ; ரஷ்யா விளக்கம்

ஈரான் எங்களிடம் இராணுவ உதவி கோரவில்லை ; ரஷ்யா விளக்கம்

ஈரான் இதுவரை தங்களிடம் எந்தவிதமான இராணுவ உதவியையும் கோரவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த ஆறு நாட்களாக ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஈரானிடமிருந்து எந்தக் கோரிக்கைகளும் வரவில்லை என்று ரஷ்யாவின் தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் ரஷ்யாவில் பெட்ரோல் விலையை “பாதிக்க முடியாது, பாதிக்கக்கூடாது” என்றும் அவர் கூறினார்.

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக வெளியான தகவல்களுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்தாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையான கடுமையான கருத்துகளை முன்வைக்கவில்லை.

அதேவேளை, ஈரான் அணு ஆயுதம் தயாரித்து வருகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை மேற்கொண்டு வருவதால் அந்த நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

மறுபுறம், ஈரானின் நட்பு நாடுகளாகக் கருதப்படும் ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியா போன்ற நாடுகள் உதவிக்கு முன்வரலாம் என்று பலர் எதிர்பார்த்தாலும், இதுவரை எந்த நாடும் ராணுவ உதவி குறித்து அறிவிக்கவில்லை. மேலும், ஈரானும் எந்த நாடுகளிடமும் உதவி கோரியதாக தகவல் வெளியாகவில்லை.

2025 ஆம் ஆண்டில் ரஷ்யாவும் ஈரானும் ஒரு மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் சில பிரிவுகள் அதில் இடம்பெற்றிருந்தாலும், ரஷ்யா மற்றும் வடகொரியா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் போல பரஸ்பர பாதுகாப்பு கடப்பாடுகள் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )