
மத்திய கிழக்கு பதற்றம் ; உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை புதிய உச்சம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் 9 சதவீதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய எண்ணெய் விலைக் குறியீடான பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானினால் எண்ணெய் கப்பல்கள் மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை தொடர்ந்தால் உலகளாவிய எரிபொருள் சந்தை மேலும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

