
பிளாஸ்டிக் நெருக்கடிக்குத் தீர்வு காண நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு வேலைத்திட்டம்
“கடந்த காலங்களில் எமது சமூகம் இயற்கைப் பொருட்களால் ஆன பொதியிடல் முறைகளையே பயன்படுத்தியது. ஆனால், கடந்த சில தசாப்தங்களாக நிலவும் தவறான மனப்பாங்கு காரணமாக பிளாஸ்டிக் பாவனைக்கு அடிமையானதால், பாரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நெருக்கடிக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம்” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன.
இலங்கையில் பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைக்கும் ‘நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ (Extended Producer Responsibility – EPR) மற்றும் மீளச் சேகரிக்கும் (Collect-back) மூலோபாய மாதிரி குறித்த விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் அண்மையில் (11) கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஊட்டப்பட்டதுடன், இது முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களால் நீண்டகால அடிப்படையில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, யுத்தம் அல்லது தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிகமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
பிளாஸ்டிக் பாவனையின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது, வருடாந்தம் 1.6 மில்லியன் மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. தினசரி கழிவு அளவு சுமார் 938 மெட்ரிக் தொன்களாகும். சூழலில் இருந்து 32% மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மொத்த கழிவுகளில் 4% மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சமநிலையின்மையால், சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு அதிக பங்களிப்பு செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலையளிக்கும் விடயமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
அனுராதபுர காலத்தில் மன்னர் பண்டுகாபய கழிவு முகாமைத்துவத்திற்காக விசேட குழுக்களை நியமித்த வரலாற்றை நினைவுகூர்ந்த அமைச்சர், பௌத்த தர்மத்தில் உள்ள ‘வனரோப சூத்திரம்’ மூலம் சூழல் பாதுகாப்பு என்பது இரவும் பகலும் புண்ணியம் சேர்க்கும் செயலாகக் காட்டப்பட்டுள்ளதை வலியுறுத்தினார். அன்றைய சமூகம் பனை ஓலை மற்றும் இயற்கை பொதியிடல்களைப் பயன்படுத்தியது.
ஆனால் இன்று “வசதி மற்றும் இலாபம்” தேடிச் சென்றதால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு அளப்பரியது என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, “செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை” என்பதை யதார்த்தமாக்க வேண்டுமானால் பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற அழகான சூழல் அவசியம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இது வெறும் வாசகமாக மட்டும் நின்றுவிடாமல், நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பு, உற்பத்தியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மக்களின் நடத்தையில் மாற்றம் கொண்ட உண்மையான “சிஸ்டம் சேஞ்ச்” (System Change) ஆக அமைய வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் எம். கொடிப்பிலி ஆராச்சி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ, தேசிய திடக் கழிவு முகாமைத்துவ உதவி நிலையத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் புஷ்ப குமார, இலங்கை சுற்றாடல் தொழில்வாண்மையாளர் நிறுவனத்தின் தலைவர் அசேல இடவெல, மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மான்னப்பெரும உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

