
IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “சரியான பதிலடி கொடுக்கப்படும் -ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி
ஈரான் கடற்படைக்குச் சொந்தமான நவீன ரகப் போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “சரியான பதிலடி கொடுக்கப்படும்” என ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.
ராணுவப் பயிற்சி ஒன்றை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தனது மாலுமிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், IRIS Dena கப்பலின் பெயரும் அதன் பணியாளர்களின் உயிர் தியாகமும், ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஈரானின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும், கடற்படை வலிமையை மேலும் பலப்படுத்துவதற்கும் மிகுந்த உறுதியுடன் செயல்படப் போவதாக ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் நிலப்பரப்பில் நடக்கும் போர் இப்போது இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது.
IRIS Dena என்பது ஈரானின் மிக நவீனமான போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.
இது தாக்கப்பட்டிருப்பது ஈரானிய கடற்படைக்கு விழுந்த பலத்த அடியாகும்.
ஈரானின் இந்த எச்சரிக்கை, சர்வதேச கடல் வணிகப் பாதைகளில் (குறிப்பாக எண்ணெய் கப்பல்கள் செல்லும் பாதைகளில்) மேலதிக பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

