
இஸ்ரேலில் இருந்து வெளியேறிய இலங்கை பணியாளர்களின் விசா காலம் நீட்டிப்பு
விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2026 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 21 வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்-நுழைவு விசாக்கள் தானாகவே ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதுப்பிக்கப்பட்ட விசா செல்லுபடியாகும் காலம் இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரசபை அமைப்பில் பதிவாகும்.
அந்த காலப்பகுதிக்குள் எல்லைகள் வழியாக மீண்டும் நுழைவதற்கும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பும் ஈரானும் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இஸ்ரேலின் வடக்கு பகுதிகளில் உள்ள பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும், அபாய எச்சரிக்கை ஒலி கேட்கும் நேரங்களில் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு விரைவாகச் செல்லுமாறும் கோரப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பான இடங்கள் இல்லாத சூழலில் பலமான சுவர்களைக் கொண்ட இடங்களில் தஞ்சம் புகவும், கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து விலகி இருக்கவும் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

