ஈரான் போருக்கு எதிர்ப்பு ; அமெரிக்க உயர் அதிகாரி திடீர் ராஜினாமா

ஈரான் போருக்கு எதிர்ப்பு ; அமெரிக்க உயர் அதிகாரி திடீர் ராஜினாமா

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த 28ஆம் திகதி தொடங்கிய தாக்குதல்கள் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் ஈரானால் தாக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ஈரானுடனான போரை எதிர்த்து, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தேசிய உளவுத்துறை இயக்குநருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்த முக்கிய அதிகாரி ஆவார்.

தனது ராஜினாமா கடிதத்தில், நடைபெற்று வரும் போரை தனது மனசாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலாக இல்லை என்றும், இஸ்ரேல் மற்றும் அதன் அமெரிக்க ஆதரவுக் குழுவின் அழுத்தத்தினாலேயே இந்தப் போர் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவதை குறைக்க வேண்டும் என்ற ஜனாதிபதி டிரம்பின் முந்தைய கருத்துக்களையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இந்த ராஜினாமா தொடர்பாக வெள்ளை மாளிகை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வழங்கவில்லை.

அமெரிக்கச் சட்டத்தின் படி, ஒரு நாட்டுக்கு எதிராக போரை ஆரம்பிக்க ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.

ஆனால், உடனடி தாக்குதல் அபாயம் உள்ள சூழலில் மட்டுமே ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஈரான் தாக்குதல் நடத்தவுள்ளதாக கூறி அமெரிக்கா இந்தப் போரைத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோ கென்ட் ராஜினாமா செய்திருப்பது, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )