
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
உலகச் சந்தையில் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை இன்று (18) 0.65 சதவீதத்தால் (67 சதம்) வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 102.75 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
நேற்று (17), கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்க கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. ஒரு பீப்பாய் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 1.23 சதவீதத்தால் (1.18 டொலர்) வீழ்ச்சியடைந்து, 95.03 டொலராகப் பதிவாகியுள்ளது.
உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் விநியோக நிலைமைகள் மேம்படும் அறிகுறிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, ஈராக் அரசாங்கத்திற்கும் குர்திஷ் அதிகாரிகளுக்கும் இடையில், துருக்கியின் செய்ஹான் துறைமுகம் வழியாக மீண்டும் எண்ணெய் ஏற்றுமதியை ஆரம்பிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு நிலவுவதால், விலைகள் சற்றே குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

