அமைதி உடன்படிக்கைக்கு உடன்படாவிடில் ஈரான் மீது கடும் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை

அமைதி உடன்படிக்கைக்கு உடன்படாவிடில் ஈரான் மீது கடும் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமைதியை விரும்புவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மிகக் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் இது குறித்துத் தெரிவிக்கையில், ஈரான் தற்போதைய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தவறினால், முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாரிய தாக்குதல்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் 15 நிபந்தனைகள் மற்றும் ஈரானின் பதில்
அதிபர் டிரம்ப் நேற்று ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த 15 நிபந்தனைகளை முன்வைத்தார். இந்த நிபந்தனைகளுக்கு ஈரான் சம்மதித்தால் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த முன்மொழிவுகளை நிராகரித்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi), அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையையும் நடத்த ஈரான் உத்தேசிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இடைத்தரகர்கள் மூலம் பல செய்திகளை அனுப்பினாலும், ஈரானுக்குத் தேவையானது போரின் ‘நிலையான முடிவு’ மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ஈரான் தரப்பிலிருந்து இழப்பீடு கோருதல் உட்பட 5 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெளியுறவு அமைச்சரின் குற்றச்சாட்டு
மத்திய கிழக்கில் நடப்பது ஈரானின் போரோ அல்லது அமெரிக்காவின் போரோ அல்ல, மாறாக இஸ்ரேலின் தேவைக்காகவே அமெரிக்கா செயற்பட்டு வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சாடியுள்ளார்.

அமெரிக்கா எதிர்பார்த்தது போல ஈரானை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்றும், அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய காலக்கெடு மற்றும் டிரம்பின் சீனப் பயணம்
மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம் என வெள்ளை மாளிகை மீண்டும் கணித்துள்ளது.

அதிபர் டிரம்பின் சீனப் பயணத்திற்கு முன்னதாக போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட அதிபர் டிரம்பின் சீனப் பயணம் மே மாதம் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கின் நிலைமை ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். உலகம் ஒரு மகா யுத்தத்தின் விளிம்பிற்கு வந்துள்ளதாகவும், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கும் இந்தப் போரை முடிக்க இதுவே சரியான தருணம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )