
மயக்க மருந்து பெண்களைக் கடத்திய தம்பதி உட்பட குழுவினரிடம்பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்கள்
மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி பாழடைந்த கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்பதி உட்பட ஏனையோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன .
கடத்தப்பட்ட பெண்களுக்கு சத்திரசிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை தெளித்து அவர்களைக் கும்பல் மயக்கமடையச் செய்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர், மயக்க மருந்து தெளிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரத்துடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தடயங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்:
கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை விலைக்கு வாங்கிய குற்றச்சாட்டில் இரண்டு நகைக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 திரிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், மாதாந்த தவணைக் கட்டண அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான முற்பணத்தை, திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்து செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு கோடரி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் பலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 19 பவுண் தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடி, அதனை சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதற்கட்டமாக, நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றை மீட்டு, விற்பனை செய்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையிலேயே நகையக உரிமையாளர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பல குற்றச் செயல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த மார்ச் 19-ஆம் தேதி வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்ற இளம் தாய் ஒருவரும் அவரது இரண்டரை வயது குழந்தையும் காணாமல் போயிருந்தனர்.
மறுநாள் அந்தத் தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
காணாமல் போன குழந்தை அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

