மினாப் பாடசாலை மீதான ஏவுகணைத் தாக்குதலின்போது உத்தரவிட்ட அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் பெயர்களைஈரான் வெளியிட்டது

மினாப் பாடசாலை மீதான ஏவுகணைத் தாக்குதலின்போது உத்தரவிட்ட அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் பெயர்களைஈரான் வெளியிட்டது

ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 168 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அமெரிக்க கடற்படைக் கப்பலான USS Spruance இன் கட்டளை அதிகாரி லே ஆர். டேட் (Leigh R. Tate) மற்றும் நிறைவேற்று அதிகாரி ஜெப்ரி ஈ. யோர்க் (Jeffrey E. York) ஆகியோரே பொறுப்பு என ஈரான் இன்று பெயரிட்டுள்ளது.

ஈரானால் பகிரப்பட்ட பதிவொன்றின்படி, இந்த அதிகாரிகள் மூன்று முறை டொமஹாக் (Tomahawk) ஏவுகணைகளை ஏவுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த இரு குற்றவாளிகளையும் நினைவில் வையுங்கள்.
லே ஆர். டேட் மற்றும் ஜெப்ரி ஈ. யோர்க் ஆகிய இவர்கள்,
மூன்று முறை டொமஹாக் ஏவுகணைகளை ஏவ உத்தரவிட்டதன் மூலம் மினாப் பாடசாலையில் 168 அப்பாவி குழந்தைகளைக் கொன்றுள்ளனர்,” என எக்ஸ் (X) தளத்தில் அந்தப் பதிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஈரானின் மினாப் பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலில் குறைந்தபட்சம் 165 பேர் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

‘ஒப்பரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையின் முதல் நாளில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினரின் (IRGC) கடற்படைத் தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன.

இராணுவ நிலைகள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதலின் ஒரு பகுதியாகவே இந்தப் பாடசாலை சேதமடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள IRGC தளம் மீதான தாக்குதலின் போது, அமெரிக்கப் படைகளே இத்தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பாடசாலைக்கு அருகில் இருந்த இராணுவ வளாகத்தின் மீதான தாக்குதலிலேயே இந்தச் சேதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பகட்ட அமெரிக்க இராணுவ விசாரணையில், இது இலக்கை தவறாக அடையாளம் கண்டமையால் ஏற்பட்ட ஒரு ‘இலக்கு தவறு’ (Targeting error) எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் மோதலின் ஆரம்ப நாட்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாடசாலையின் காலை நேர அமர்வின் போது இத்தாக்குதல் நடத்தப்பட்டதில் மாணவர்கள் உட்பட 165 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்தது.

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் நடவ் ஷோஷானி, இந்தச் சம்பவத்திற்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார்.

வாஷிங்டனில், இந்தச் சம்பவம் குறித்த ஆய்வுகள் அதிகரித்துள்ளன. 45 க்கும் மேற்பட்ட ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்திடம் (Pete Hegseth) இது குறித்து விளக்கம் கோரியுள்ளனர்.

குறிப்பாக, பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பென்டகன் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டமை குறித்தும் சட்டமியற்றுபவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )