
ஹட்டனில் தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் சடலமாக மீட்பு
கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் ஸ்ட்ரதன்வத்தை பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் இருந்து, இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த இரு பிள்ளைகளின் தந்தையின் சடலம் இன்று (31) அதிகாலை கண்டெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகேந்திரன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது கணவர் இரண்டு நாட்களாக வீடு திரும்பவில்லை என அவரது மனைவி வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதிகளவு மதுபோதையில் இருந்த அவர், பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது தவறி பாலத்திற்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஹட்டன் – கண்டி வீதியில் தனியார் பஸ் ஓட்டுநராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சடலம் தொடர்பான ஆரம்பக்கட்ட நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மரணப் பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

