
இனி மாணவர்களை உடல் ரீதியாக தாக்க முடியாது கல்வி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் வெளியீடு
பாடசாலைகளுக்குள் ஒழுக்கக்கட்டுப்பாட்டைப் பாதுகாப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்கள், பஜிரிவெனாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கு இந்தச் சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை ஒழுக்கக்கட்டுப்பாடு தொடர்பாக கல்வி அமைச்சினால் இதற்கு முன்னர் 2016 ஏப்ரல் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் உள்ள அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக, இந்தப் புதிய சுற்றுநிருபத்தின் விதிகளையும் இனிமேல் நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பொன்றின் பந்தியைக் மேற்கோள் காட்டி இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எந்தவொரு பிள்ளைக்கும் தண்டனை வழங்குவதற்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ எவ்விதமான உடல் ரீதியான அல்லது மன ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடாது எனவும், எந்த மட்டத்திலும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்க முடியாது எனவும் அந்தச் சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்படும் எனவும் அந்தப் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் ஒழுக்கக்கட்டுப்பாட்டைப் பேணும்போது, குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்துத் தனிப்பட்ட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என இந்தச் சுற்றுநிருபத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

