அழிவின் விளிம்பில் நல்லூர் மந்திரிமனை ; உடனடி நடவடிக்கை கோரி அழைப்பு

அழிவின் விளிம்பில் நல்லூர் மந்திரிமனை ; உடனடி நடவடிக்கை கோரி அழைப்பு

யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படும் நல்லூர் மந்திரி மனை கண்முன்னே அழிந்து போவதை அமைதியாகப் பார்க்க முடியாது என சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் இலங்கை தொல்லியல் துறையும் இணைந்து இரு வாரங்களுக்குள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இல்லையெனில், இன்னொரு மழை பெய்தாலே கட்டிடம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும், அலட்சியம் தொடருமானால் இந்த வரலாற்றுச் சின்னம் முழுமையாக அழிந்து விடும் என்றும் எச்சரித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், சமீபத்தில் பெய்த மழையால் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே இடிந்து விழுந்துள்ளதாகவும், அருகில் வசிப்பவராக தமக்குப் பெரும் அக்கறை இருப்பதாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கட்டிடம் நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் கீழ் உள்ளதால், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவையான நிதியை வழங்கத் தயார் என்றும் அவர் கூறினார்.

நம்பிக்கை பொறுப்பாளர்கள் புனரமைப்பை மேற்கொள்ள முடியாவிட்டால், தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாண தமிழ் மன்னரின் முக்கிய வரலாற்றுச் சின்னமாக விளங்கும் இந்த மந்திரிமனை அழிவதை ஏற்க முடியாது எனவும், இரு தரப்பினரும் தங்களது முடிவை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )