
பேருந்து சேவைகள் நிறுத்தம் ; மக்கள் அவதி
பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை சேவையிலிருந்து விலக சில தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்ததால், இன்று (23) காலை பிரதான பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையைத் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, டீசல் விலை அதிகரித்துள்ளதால், பேருந்து கட்டணத் திருத்தம் அவசியம் என சங்கங்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தன.
நேற்றைய (22) தினமே கட்டணத் திருத்தம் வழங்குமாறு கோரியிருந்த போதிலும், அது நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்றைய தினம் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்ததாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் வரை சேவையில் ஈடுபட போவதில்லை எனப் பேருந்து சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

