
நிலக்கரி ஊழல் தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திற்கெதிராக CID யில் முறைப்பாடு
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்தனர்.
நிலக்கரி டெண்டர் கோரலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் இந்த முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.
முறைப்பாட்டை வழங்கிய பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முஜிபுர் ரஹ்மான்,
“ஒரு குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதைக் கேட்கும் போது அங்கு ஒரு ஊழல் நடந்துள்ளது என்பது புரிகிறது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒரு நண்பருக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பது குறித்த உரையாடல்கள் அந்த குரல் பதிவில் உள்ளன. அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியே இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்தோம். அந்த உரையாடலில் ஜனாதிபதியின் பெயர் மற்றும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதன் மூலம் தெளிவாக ஒரு ஊழல் இடம்பெற்றுள்ளமை உறுதியாகிறது.”

