
சீனா எந்த நேரத்திலும் இலங்கைக்கு உதவ தயார் -சீனத் தூதுவர்
இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவுவதற்கு சீனா எப்போதும் எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
அக்குரண, பானாகல பகுதியில் சீன மொழி மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (13) சீனத் தூதுவர் கி சென்ஹொங் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை – சீன பௌத்த கலாசார பரிமாற்ற மையத்தின் பணிப்பாளரும், மானாகல புராண விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய பரணகம ஞானவிமல தேரரின் வழிகாட்டலில், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அனுசரணையுடன் இந்த மொழி மையம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, அப்பகுதி மக்களுக்காக சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர் கி சென்ஹொங்,
“சீனாவும் இலங்கையும் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமான உறவைப் பேணி வரும் உற்ற நண்பர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இலங்கையர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும், சீனா முதலில் முன்வந்து அந்தச் சூழலிலிருந்து மீள உதவி செய்கிறது. தற்போதைய போர்ச் சூழலால்இலங்கையர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், சீனா தான் முதலில் பெருமளவிலான எரிபொருளை நன்கொடையாக வழங்க முன்வந்தது.
டிட்வா புயல் காலத்தின் போது கூட, சேதமடைந்த பாலங்களை நிர்மாணிப்பதில் சீனா ஒத்துழைப்பு வழங்கியது. அதேபோல, இலங்கையர்களுக்குத் தொடர்ந்து உதவிகளை வழங்க சீனா எதிர்பார்க்கிறது.”

